சீனத் தலைமையமைச்சர்-அமெரிக்க நிதித்துறை அமைச்சர் சந்திப்பு
2024-04-07 19:09:21

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஏப்ரல் 7ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் எல் யெலன் அம்மையாரைச் சந்தித்தார்.

லீ ச்சியாங் கூறுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிகாட்டலுடன், தற்போது சீன-அமெரிக்க உறவில் சீரான வளர்ச்சி போக்கு காணப்பட்டுள்ளது. அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் அரசுத் தலைவர் பைடனுடன் தொலைப்பேசி மூலம் உரையாடினார். பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, சீன-அமெரிக்க உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற இரு தரப்பினரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். அமெரிக்கா சீனாவுடன் ஒரே திசையை நோக்கி முன்னேறி, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய பொது கருத்துக்களைத் தொடர்ந்து சீராக செயல்படுத்த வேண்டும் என சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இரு தரப்புகளின் தத்தமது வளர்ச்சிக்கும் உலகப் பொருளாதார அதிகரிப்புக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு தரப்பும் தொடர்பை வலுப்படுத்தி, இரு நாட்டுப் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பின் சீரான வளர்ச்சியை விரைவுபடுத்தி, இரு நாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு மேலதிக நன்மைகளைத் தருவதோடு, உலகப் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

யெலன் அம்மையார் கூறுகையில், இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், இரு நாட்டு உறவு மென்மேலும் சீராக மாறியுள்ளது. அமெரிக்க-சீன பொருளாதாரப் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பில் பெறப்பட்டுள்ள முன்னேற்றத்தை அமெரிக்கா பாராட்டுகிறது. சீனாவுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டிய பொது கருத்துக்களைச் செயல்படுத்தி, உலகளாவிய அறைகூவல்களைச் சமாளித்து, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாக தெரிவித்தார்.