சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்னாற்றல் வாகன வர்த்தகம் மீதான தடை பற்றி சீனா கருத்து
2024-04-08 19:20:38

தேசியப் பாதுகாப்பை அச்சுறுத்துவதைச் சாக்குப்போக்காக கொண்டு, சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்னாற்றல் வாகனங்களைப் புலனாய்வு செய்யும் என்று அமெரிக்க அரசு அண்மையில் அறிவித்தது. அத்துடன், சுங்கத் துறை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் மின்னாற்றல் வாகனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இது குறித்து சீன தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள், போதிய சான்றுகள் இல்லாத நிலையில் சீனாவின் மின்னாற்றல் வாகன வர்த்தகம் மீது தடை நடவடிக்கையைச் செயல்படுத்துவது, உலக வர்த்தக அமைப்பின் சர்வதேச வர்த்தக விதிக்குப் பொருந்தியதாக இல்லை. உலக வாகனத் தொழில் சங்கிலி மற்றும் வினியோகச் சங்கிலியையும், உலக நுகர்வோரின் நலன்களையும் பாதிக்கும் என்று தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், பசுமையான, கரி குறைந்த, தொடரவல்ல வளர்ச்சி பாதையில் சீனா ஊன்றி நின்று வருகிறது. தொழில் நுட்பப் புத்தாக்கத்தை முன்னேற்றி, சர்வதேச சமூகத்துக்கு அதிக வகைகளிலான மற்றும் தரமிக்க புதிய எரியாற்றல் வாகனத்தின் மூலப் பொருட்கள், உதிரிபாகங்கள் மற்றும் வாகனங்களை வினியோகித்து, உலகின் புதிய எரியாற்றல் வாகனத் தொழிலின் வளர்ச்சிக்கு வலுவான இயக்கு ஆற்றலை உட்புகுத்தியுள்ளது என்றும் சீன தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் தெரிவித்தது.