உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் இலங்கை ஒத்துழைப்பு
2024-04-09 17:04:13

பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பை இலங்கை நாடுகிறது என்று இலங்கை தலைமை அமைச்சர்  அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோலில் இலங்கை தலைமை அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளருமான பான் கீ மூன், இலங்கையுடனான நெருக்கமான கூட்டுறவிற்கு பாராட்டு தெரிவித்தார்.

இலங்கைக்கும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்திற்கும் இடையிலான நீண்டகால இணக்கமான உறவுகளை வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும்  வாய்ப்புகளை ஆராயும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலையான போக்குவரத்து மற்றும் பசுமையான நகரங்களை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், இலங்கை அரசு  பசுமையான, மேலும் உள்ளடக்கிய, மற்றும் மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்திற்கு மாறுவதற்கான செயல்பாட்டில் உள்ளது என்று குணவர்தன மேலும் கூறினார்.