2024ஆம் ஆண்டு உலக சரக்கு வர்த்தகம் பற்றிய உலக வர்த்தக அமைப்பின் மதிப்பீடு
2024-04-11 19:35:05

உலக வர்த்தக அமைப்பு ஏப்ரல் 10ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் உலக சரக்கு வர்த்தக அளவு, 2.6 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரியாற்றல் விலை உயர்வு, தொடர்ந்து நீடித்த பண வீக்கம் ஆகியவற்றால் கடந்த ஆண்டு உலக வர்த்தக அளவு சுருங்கியது. இவ்வாண்டு உலக வர்த்தகம் படிப்படியாக மீட்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் தரவுகளின்படி 2023ஆம் ஆண்டு உலக சரக்கு வர்த்தக அளவு 1.2 விழுக்காடு குறைந்தது. இவ்வாண்டின் மீட்சியடையும் போக்கு அடுத்த ஆண்டிலும் நிலைநிறுத்தப்படும் என்றும் 3.3 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் இவேலா அம்மையார் கூறுகையில், உலக வினியோக சங்கிலியின் வலிமை மற்றும் நிதானமான பலதரப்பு வர்த்தகக் கட்டுக்கோப்பு ஆகியவற்றால், உலக வர்த்தக மீட்சியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்றார். உலகப் பொருளாதார அதிகரிப்பு மற்றும் நிதானத்தை நிலைநிறுத்தும் வகையில், புவிசார் அரசியல் சர்ச்சை மற்றும் வர்த்தகத்தைத் துண்டு துண்டாக்குவது முதலிய ஆபத்துக்களைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.