
முன்னரே குறிப்பிட்டது போல், உணவு தயாரிக்கப்படும் முறை, அதன் வகைகள், பரிமாறும் பாங்கு மட்டுமல்லாது எவ்வளவு உணவு சாப்பிடுகின்றனர், எப்படி சாப்பிடுகின்றனர், யார் எப்போது சாப்பிடுகின்றனர் இவையெல்லாமே ஒரு நாகரிகத்தும் மற்ற நாகரிகத்துக்கும் இடையில் வேறுபடுகின்றன. பண்பாட்டு ரீதியான வேறுபாடாக இதை நாம் கருதலாம்.
அத்தோடு நின்றுவிடவில்லை, ஒரு பண்பாட்டின் உட்பிரிவுகளுக்குள்ளும் அவரவரது பொருளாதார வசதி, சமயம், வயது, மற்றும் பருவகாலம், ஏன் செய்யும் தொழில் மற்றும் உடல் நலம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபட்ட உணவுப்பழக்கங்கள் இருக்கின்றன. மானுடவியலாளர்கள், சமையற்கலை வல்லுனர்கள் ஆகியோரின் கருத்துப்படி, பரந்து விரிந்த சீனாவில், மிக பலதரப்பட்ட, பலவகைப்பட்ட உணவுகளும், உணவுத்தயாரிப்பும், உணவருந்து பழக்கங்களும் காணப்படுகின்றன.
என்னதான் வேறுபட்டாலும், என்னதான் மாறுபட்ட வழிமுறைகளில் சமைத்தாலும், உணவு பரிமாறப்படுவது யாருக்காக இருப்பினும், எந்த பருவகாலத்தில் அந்த உணவு தயாரிக்கப்படுகிறது என்றாலும், சீன சமையற்கலைஞர்கள் வரலாற்றின் அனைத்து காலக்கட்டங்களிலும் ஒரு விடயத்தில் ஒரே கண்ணோட்டத்தை வைத்திருந்தனர். அது, உணவை மருந்தாகக் கொண்ட, கருதிய எண்ணமாகும். உணவை மருந்தாக பாவிக்கும், கருதும் சீனாவின் பண்டைய தத்துவம் ஒரு ஆழமான பண்பாட்டு அம்சமாகும்.
1 2 3 4
|