
கன்ஃபியூசியனிசம் அல்லது கன்ஃபியூசிய கோட்பாடு உணவு மற்றும் உணவருந்தலின் சமூக மற்றும் அழகியல் அம்சங்களையும், உணவின் தன்மை மற்றும் தோற்றத்தையும் பற்றி அதிகம் கரிசனை கொண்டது என்றால், தாவிசம் (தாவோயிசம் அல்ல) அல்லது தாவ் கோட்பாடு, நீடுவாழ் வாழ்க்கை மற்றும் உடல்நலத்தில் கவனம் செலுத்தியதால், உணவு சமைத்தல் மற்றும் உட்கொள்வட்து தொடர்பாக மிகவும் தூய்மையான, சுகாதாரமான சடங்குகளை, வழிமுறைகளை உருவாக்கினர். நீடுவாழ் வாழ்க்கையும், நல்ல உடல்நலமும் பெறுவதற்கான விருப்பமே தாவிசத்தின் இந்த கோட்பாட்டின் நோக்கம் எனலாம்.
பல நூற்றாண்டுகளாக சீனார்கள், உணவை மருந்தாகவும், சமையர்கலையை பல்வேறு உணவுப்பொருட்களிலான மருத்துவ நலன்களை அனுபவிக்க உதவும் கருவியாகவும் பயன்படுத்தினர். மேற்கத்தியர்கள் ஆற்றல் தரும், ஊட்டச்சத்து தரும் பொருளாக உணவை பயன்படுத்துகின்றனர், கருதுகின்றனர். நோய்களை நீக்கும் தனிப்பட்ட ஒரு பொருளாக மருந்தை கருதுகின்றனர். ஆனால் சீனர்கள் எல்லா உணவுப்பொருட்களும் உடல்நலத்தை பேணும் அவற்றுக்கே உரித்தான திறன்களையுடையவை என்று கருதுகின்றனர். உணவு தயாரிக்கப்படும் முறை, குறிப்பிட்ட உணவில் உள்ள பொருட்கள், தயாரிக்கப்படும் காலம், அளவு, உட்கொள்ளும் நபர் இந்த அம்சங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இணைந்து நலத்தை பேணுவதில் துணைபுரிகின்றன. இன்றைக்கு உலகில் அதிலும் குறிப்பாக அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து செழித்த மேற்கத்திய நாடுகளில் மிகுந்த கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது சீனப் பாரம்பரிய மருத்துவம். ஏழு கடல் ஏழு மலை தாண்டி, குகைக்குள்ளே ஒரு பறவையின் கழுத்தில் தொங்கிய ரத்தினத்தில் தன் உயிரை வைத்திருந்த மந்திர சாமியாரின் தந்திர சூத்திரத்தின் பின்னணி கொண்டது இந்த சீனப் பாரம்பரிய மருத்துவம் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம் சீனப் பாரம்பரிய மருத்துவம் ஒரு வழமையான சமையலைறையில்தான உருவானது என்றே கூட சொல்லலாம். அவ்வளவு எளிதான உணவுடன் ஒன்றுகலந்த அம்சங்களை உல்ளடக்கியது சீனப் பாரம்பரிய மருத்துவம். சமையலறையில் உருவான சீனப் பாரம்பரிய மருத்துவம் இன்னும் அங்கிருந்து வெளியேறவில்லை என்றுகூட சொல்லலாம். புகழ்பெற்ற ஒரு சமையல் கலைஞரான சீனாவின் முதல் தலைமையமைச்சர் என்று கருதப்படும் யி யின் (Yi Yin) போன்ற சமையற்கலைஞர்கள் பல்வகை உணவுப்பொருட்கள் கொண்ட உணவுப் பழக்கத்தையும், உடலின் குறிப்பிட்ட உறுப்புக்கு உகந்த உணவு மற்றும் சுவையையும் பரிந்துரை செய்தனர். கசப்புச் சுவை இதயத்திற்கும், மனதுக்கும் நல்லது, புளிப்பு கல்லீரலுக்கு நல்லது, நெடி அதிகமான, விறுவிறு சுவை நுரையீரலுக்கு உகந்தது, இனிப்பு மண்ணீரலுக்கு நல்லது, உப்புச்சுவை அல்லது உவர்ப்பு சிறுநீரகம், இனப்பெருக்க மற்றும் அண்ணீரகச் செயல்பாடுகளுக்கு நல்லது என்று இந்த சீன சமையற்கலைஞர்கள் கூறியுள்ளனர். உண்மையில் இவர்கள் சமையல் செய்யும் ஒரு கலைஞராக மட்டுமன்றி உணவை, உணவுப்பொருட்களை வினியோகிக்கும் நபர்களாக மட்டுமன்றி, மருத்துவமும், மாயவித்தையும் இணைந்த ஒரு கூட்டுத்திறமையாளர்களாக, அந்த காலத்தில் கருதப்பட்டனர். ஆக சமையற்கலைஞர்களுக்கு அக்காலத்தில் பெரும் வரவேற்பும், மதிப்பும் இருந்தது. 1 2 3 4
|