ரஷியாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்க சீனா ஆதரவு
2022-02-26 16:00:18

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 25ஆம் நாள் ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியபோது, பனிப்போர் சிந்தனையைப் புறக்கணித்து, பல்வேறு நாடுகளின் நியாயமான கவனத்துக்கு முக்கியத்துவம் மற்றும் மதிப்பு அளித்து, பேச்சுவார்த்தை மூலம் சமமான, பயனுள்ள மற்றும் தொடரவல்ல ஐரோப்பிய பாதுகாப்பு இயங்குமுறையை உருவாக்க வேண்டும் என்றும், ரஷியா உக்ரைனுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சீனா ஆதரவளிக்கிறது என்றும் தெரிவித்தார். அப்போது புதின் கூறுகையில், உக்ரைனுடன் உயர்நிலை பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்தார்.

இது மிக முக்கியமான தொலைபேசி தொடர்பு ஆகும். அரசியல் முறையில் உக்ரைன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சீனா மேற்கொண்ட புதிய முயற்சியும் இதுவாகும். மேலும், சீன வெளியுறவு அமைச்சர் முறையே ரஷியா மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார். சீனாவின் செயல்பாடு, ஒரு பெரிய நாட்டின் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்ட போதிலும், இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வாய்ப்பு இன்னும் நிலவுகிறது என்ற முக்கிய சமிக்கையை சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் தொலைபேசி தொடர்பு வெளிக்காட்டுகிறது.

தவிரவும், உக்ரைன் அரசுத் தலைவர் 25ஆம் நாள் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகத் தெரிவித்ததோடு, நேட்டோ மீதான ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார்

உக்ரைன் பிரச்சினை தொடர்பாக, அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்ட நேட்டோவுக்கு தட்டிகழிக்க முடியாத பொறுப்பு இருக்கிறது. பனிப்போர் முடிந்த பிறகு, நேட்டோவின் 5 முறை விரிவாக்கம், ரஷியாவின் எல்லை பாதுகாப்பைப் பாதித்து வருகிறது. ரஷியாவுக்கும், அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்கும் இடையே பதற்ற நிலைமை தீவிரமாகி வருவதற்கு இது அடிப்படையான காரணமாகும். மேலும், நேட்டோவில் இணைய விரும்பும் உக்ரைனின் கோரிக்கையை நேட்டோ மறுபடியும் மறுத்துள்ளது. இதனால், உக்ரைன் ரஷியாவைத் தடுக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்ட உண்மை தெளிவாகியுள்ளது.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான இராணுவ மோதலை அமெரிக்கா வரவேற்கிறது. இந்நிலையில், ரஷியா மீது தடை நடவடிக்கையை மேற்கொள்வதில் அமெரிக்காவுக்கு சாக்குப்போக்கு கிடைக்கும். அதோடு, இம்மோதலில் அமெரிக்காவின் இராணுவத் தொழில் கலப்பு நிறுவனங்கள் நிறைய பணம் சம்பாதிக்கும்.

புதிய தகவலின்படி, உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷிய பிரதிநிதிக் குழு அனுப்பப்பட உள்ளது. இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது.