தில்லியில் வாடகை கார்கள், டேக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
2022-04-19 17:07:39

பயணத்துக்கான கட்டணத்தை அரசு நிர்ணயத்தல், எரிபொருள் விலை குறைப்பு, பயணக் கட்டணத்தை மறுபரிசீலனை செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் வாடகைக் கார் மற்றும் டேக்சி ஓட்டுநர்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர். தற்போது, பயணக் கட்டணம் ஓலா மற்றும் உபெர் போன்ற நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.

ஓட்டுநர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற உறுதியை தில்லி அரசு கடந்த வாரம் தெரிவித்தபோதிலும், வேலை நிறுத்தப் போராட்டத்தை ஓட்டுநர்கள் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் குழுவின் பரிந்துறைக்கு ஏற்ப பயணக் கட்டணம் முடிவு செய்யப்படும் என்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலட் தெரிவித்தார்.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வேட் வரியைக் குறைக்க வேண்டும் என்றும் இவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.