இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே தாராள வர்த்தக உடன்படிக்கை
2022-05-02 15:50:42

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான தாராள வர்த்தக உடன்படிக்கை மே முதல் நாள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.

இந்திய வணிகத்துறைச் செயலாளர் பி. வி. ஆர். சுப்ரமணியன் அன்று கூறுகையில், மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் துணை சஹாரா ஆப்பிரிக்காவுக்குச் செல்லும் முக்கிய நுழைவாயிலாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. வரும் 5 ஆண்டுகளுக்குள் இருதரப்பு ஆண்டுக்கான வர்த்தகத் தொகை தற்போதைய 6000 கோடி அமெரிக்க டாலரிலிருந்து 10 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்க இந்த உடன்படிக்கை துணைபுரியும் என்று தெரிவித்தார்.

பிப்ரவரி 28ஆம் நாள் கையெழுத்தான இவ்வுடன்படிக்கை நடைமுறைக்கு வந்ததுடன், 90 விழுக்காட்டு இந்திய வணிகப் பொருட்களுக்கும், 65 விழுக்காட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகப் பொருட்களுக்கும் சுங்கவரி இல்லாத சந்தை அனுமதி சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.