ஐக்கிய அரபு அமீரகத்துடனான வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு 2900 கோடி அமெரிக்க டாலர்கள் வரையிலான வாய்ப்பைப் பெறும் இந்திய ஏற்றுமதியாளர்கள்!
2022-05-12 18:31:18

விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துடன் 2900 கோடி  அமெரிக்க டாலர்கள் வரையிலான வாய்ப்பைப் பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் கீழ், 90 தயாரிப்புகளில் 56 தயாரிப்புகளுக்கு சுங்க வரியற்ற சந்தை அணுகலை இந்தியா பெறமுடியும் என்று அறிக்கை கூறுகிறது.

மும்பையில் உள்ள உலக வர்த்தக மையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மரி, தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர் அஹ்மத் பெல்ஹோல் அல் ஃபலாசி ஆகியோர் தலைமையிலான உயர்மட்டக் குழு இந்தியாவில் பயணம் செய்து இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை பற்றி விவாதித்தனர்.

2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் இரண்டாவது பெரிய சரக்கு ஏற்றுமதி நாடாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.