சர்வதேச நாணய நிதியத்தின் நாணயக் கூடையில் சீன நாணயம் 12.28 விழுக்காடு உயர்வு
2022-05-15 18:41:23

எஸ்.டி.ஆர் என அறியப்படும் நாணயக் கூடை, அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பு உரிமைகளின் நாணயக் கூடையில் தற்போதைய உள்ளடக்கம் மாறப்போவதில்லை என இந்நிதியத்தின் இயக்குநர்கள் குழு அண்மையில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

இந்த நாணயக் கூடையில், அமெரிக்க டாலர், யூரோ, சீன ரென்மின்பி, ஜப்பானின் யென், பிரிட்டன் பவுண்டு ஆகிய ஐந்து நாணயங்கள் தொடர்ந்து இடம்பெறும். அதேவேளையில், சீன ரென்பின்பியின் பங்கு முன்பு 10.92 விழுக்காட்டில் இருந்து  12.28 விழுக்காடாக உயர்த்தப்படும். அமெரிக்க டாலரின் பங்கு முன்பு 41.73 விழுக்காட்டில் இருந்து 43.38 விழுக்காடாக அதிகரிக்கப்படும். யூரோ, ஜப்பானின் யென் மற்றும் பிரிட்டன் பவுண்டு ஆகிய  மூன்று நாணயங்களின் பங்கு முறையே சிறிய அளவில் குறைக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

புதிய நாணயக் கூடை, இவ்வாண்டு ஆகஸ்டு முதல் நாள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும். அடுத்த முறை, 2027ஆம் ஆண்டு சிறப்பு எடுப்பு உரிமைகள் குறித்து மீண்டும் பரிசீலனை செய்யப்படும்.