மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் உச்சிமாநாடு
2022-05-17 11:02:07

கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் உச்சிமாநாடு மே 16ஆம் நாள் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தலைவர்கள், இவ்வமைப்பின் கட்டுக்கோப்புக்குளான ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பு, சர்வதேச மற்றும் பிரதேச சூடான விவகாரங்கள், கூட்டுப் பாதுகாப்பு முறைமையின் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதம் நடத்தினர்.

ரஷியா, பெலாரஸ், கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் மற்றும் ஆர்மீனியா தலைமையமைச்சர் இம்மாநாட்டில் கலந்து கொண்டு கூட்டறிக்கை ஒன்றில் கையொப்பமிட்டனர்.

உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு, அரசுரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டை இவ்வமைப்பு பேணிக்காத்து, உலக மற்றும் பிரதேசப் பாதுகாப்பை வலுப்படுத்தப் பாடுபடும். சர்வதேசச் சட்டத்தின் விதிமுறை மற்றும் கோட்பாட்டின்படி சர்வதேசப் பிரச்சினைகளை நேர்மையான முறையில் தீர்க்கும். மேலும், ஐ.நா உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகளுடனும் தொடர்புடைய நாடுகளுடனும் ஒத்துழைப்புகளை ஆழமாக்க இவ்வமைப்பு விரும்புகிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு 2002ஆம் ஆண்டு மே திங்கள் உருவாக்கப்பட்டது. இதுவரை 6 உறுப்பு நாடுகள் இவ்வமைப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.