வெறும் கையில் லாபம் ஈட்டும் அமெரிக்காவின் சதி
2022-05-24 16:18:27

அமெரிக்கா கூறிவரும் இந்தோ-பசிபிக் தொலைநோக்கின் கீழ் இன்னொரு சதி வெளிவந்துள்ளது. இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டதாக 23ஆம் நாள் ஜப்பானில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க தலைவர் அறிவித்தார். விநியோக சங்கிலியில் சீனாவுடனான தொடர்பை துண்டிப்பது, அமெரிக்க சந்தைக்குள் நுழைவதற்கான சுங்க வரியைக் குறைக்காதது ஆகியவற்றைத் தவிர, இக்கூட்டமைப்பின் பெரும்பாலான அம்சங்கள் தெளிவாகக் கூறப்படவில்லை. வெறும் கையில் லாபம் ஈட்டும் அமெரிக்காவின் சதியாக இது கருதப்படுகிறது.

இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மூலம் தொடர்ந்து அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு பயனுள்ள முறையில் தடுக்கப்படவுள்ளதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்ரின் தை தெரிவித்தார்.

பிற தரப்புகளை விலக்கிவைத்து பிரதேசத்தில் சொந்தப் பொருளாதார மேலாதிக்கத்தைப் பேணிக்காக்கும் அரசியல் கருவி இக்கூட்டமைப்பு ஆகும் என்ற உண்மையை தெளிவாகக் காண முடியும். அமெரிக்கா கூறும் சுதந்திரம், திறப்பு மற்றும் செழுமைக்குப் பதிலாக, இத்தகைய போலி பலதரப்புவாதம் பிரிவினை மற்றும் எதிர்ப்பை மட்டுமே கொண்டு வரும்.

மேலும், ஒத்துழைப்பின் வடிவம் மற்றும் செய்முறை, அமெரிக்காவின் அதிகமான கோரிக்கை மற்றும் குறைந்த பங்கு, நிலையான தன்மை உள்ளிட்டவை பற்றி பல ஆசிய-பசிபிக் நாடுகளிடையில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், பணவீக்கம் அதிகரிப்பு, கரோனா தடுப்பில் தோல்வி உள்ளிட்ட பல அறைகூவல்களை அமெரிக்கா எதிர்நோக்கி வருகிறது. இந்தக் கூட்டமைப்பு அமலுக்கு வர முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வியாகும்.

ஆசிய-பசிபிக் பிரதேசம், புவிசார் அரசியல் விளையாட்டுக்குப் பதிலாக, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான  பிரதேசமாகும். பொருளாதாரத் தொடர்பின் துண்டிப்பு, தொழில்நுட்ப முற்றுகை மற்றும் தொழில் சங்கிலித் துண்டிப்பை வேண்டுமென்றே ஏற்படுத்தும் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு பிரதேசத்தின் அடிப்படை நலன்களுக்குத் தீங்கு விளைவிப்பது உறுதி.