14ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய ஷி ச்சின்பிங்
2022-06-24 09:30:51

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாளிரவு காணொளி வழியாக, 14ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.

அவர் உரை நிகழ்த்துகையில், மனிதச் சமூகம் எங்குச் செல்லும் என்பதற்கான முக்கிய தருணத்தை எதிர்நோக்குகின்றோம். புதிதாக வளரும் முக்கிய சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளான பிரிக்ஸ் நாடுகள், பொறுப்பேற்று முன்னேற்றங்களைப் படைத்து, உலகத்துக்கு ஆக்கப்பூர்வமான நிலையான உந்து சக்தியை ஊட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முதலாவதாக, சர்வதேச சமூகத்தில் உண்மையான பல தரப்புவாதத்தைச் செயல்படுத்த வேண்டும். இரண்டாவதாக, உலகளவில் தொற்றுநோய் தடுப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, பொருளாதார மீட்சிக்கான கூட்டுச் சக்தியை ஒன்று திரட்டி, பொறுமை மற்றும் நெகிழ்வுத் தன்மை வாய்ந்த பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும். நான்காவதாக, மக்களை மையமாகக் கொண்ட சிந்தனையில் ஊன்றி நின்று, தொடரவல்ல வளர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டுள்ளார்.

பிரிக்ஸ் நாடுகள் மேலாதிக்கத்தை எதிர்த்து நீதி நியாயம் மற்றும் சமத்துவத்தைப் பேணிக்காக்க வேண்டும். பிரிவினையை எதிர்த்து, ஒற்றுமையைப் பேணிக்காக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியதோடு, பிரிக்ஸ் கூட்டாளிகளுடன் இணைந்து உலகப் பாதுகாப்பு முன்மொழிவின் நடைமுறையாக்கத்தை முன்னெடுத்து, அணி சேரா முறையில் பேச்சுவார்த்தை மூலம் கூட்டு வெற்றி பெறக் கூடிய புதிய ரக பாதுகாப்பு வழியை உருவாக்கி, உலகிற்கு நிலைத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலை ஊட்ட சீனா விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், நெருக்கடி நிலையில் கோளாறு ஏற்படும் அதேவேளை, சீர்திருத்தமும் தூண்டப்படும். இதற்கான அணுகுமுறை திறவுகோலாகும். பிரிக்ஸ் கூட்டாளிகளுடன் சேர்ந்து உலக வளர்ச்சி முன்மொழிவை மேம்படுத்தி, மேலும் வலுவான, பசுமையான மற்றும் சீரான உலக வளர்ச்சிக்குத் துணைபுரிய சீனா விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயர் தர கூட்டாளியுறவை உருவாக்கி, உலக வளர்ச்சியின் புதிய கட்டத்தை கூட்டாக எட்டுவது என்ற தலைப்புக்கிணங்க, ஐந்து நாடுகளின் தலைவர்கள் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாற்றி நிறைய பொது கருத்துகளை எட்டியுள்ளனர்.

பிரிஸ்க் நாட்டு தலைவர்களின் 14ஆவது பேச்சுவார்த்தையின் பெய்ஜிங் முன்மொழிவு இப்பேச்சுவார்த்தையில் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.