அமெரிக்காவில் குரங்கம்மை பாதிப்பு 1470ஆக உயர்வு
2022-07-16 18:37:24

ஜுலை 14ஆம் நாள் வரை, அமெரிக்காவின் 44 மாநிலங்களில் மொத்தம் 1470 பேருக்கு குரங்கம்மை தொற்று நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொது சுகாதார துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் சிலர், குரங்கம்மை தொற்று நோயை சமாளிப்பதில் அமெரிக்க அரசு போதுமான அளவு செயல்படவில்லை என்றும் கோவிட்-19 தொற்றைச் சமாளிப்பதில் நிகழ்ந்த தவறு மீண்டும் நடந்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டினர்.

தற்போது, அமெரிக்காவில் இதற்கான சோதனைப் பணி தாமதமாக நடைபெற்று வருவதால், குரங்கம்மை தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள்  விரைவாக சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக, இந்த தொற்று நோய் மேலதிக மக்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது என்று சுகாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க அரசு துறை வெளியிட்ட பாதிப்பு எண்ணிக்கை, உண்மையான எண்ணிக்கையை விட மிகவும் குறைவாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.