ஐரோப்பாவில் கோவிட்-19 பாதிப்புகள் மீண்டும் அதிகரிப்பு
2022-07-21 16:35:42

பல்வேறு ஐரோப்பிய நாடுகள் சமூகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருவதுடனும், ஒமைக்ரான் திரிபைச் சேர்ந்த BA.4, BA.5 ஆகிய புதிய துணை வகைகள் பரவி வருவதுடனும், கடந்த சில வாரங்களில் ஐரோப்பாவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. புதிய சுற்று கோவிட்-19 பரவலால் ஐரோப்பா பாதிக்கப்பட்டு வருகிறது என்று ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

வரும் சில வாரங்களில் இந்நோய் பாதிப்பினால் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரிக்கும் என்று இம்மையத்தின் மூத்த நிபுணர் அகோரிட்சா பாகாவின் கூற்றை மேற்கோள் காட்டி, ஸ்வீட்டன் தொலைக்காட்சி நிலையம் 20ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

மேலும், வைரஸ் பரவலைக் குறைக்கும் விதம், பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது, பெருமளவு கூட்டத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் ஐரோப்பாவில் மீண்டும் மேற்கொள்ளப்படக் கூடும் என்றும் பாகா தெரிவித்தார்.