வென்தியன் விண்வெளி நிலையத்தின் ஆய்வகத் தொகுதி ஏவுதல் வெற்றி
2022-07-24 16:09:49

 

பெய்ஜிங் நேரப்படி ஜுலை 24ஆம் நாள் பிற்பகல் 2 மணி 22 நிமிடத்தில், வென்தியன் விண்வெளி நிலையத்தின் ஆய்வகத் தொகுதி, ஹாய்நான் மாநிலத்திலுள்ள வென்சாங் ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-5B-Y3 ஏவூர்தி மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 495 வினாடிகளுக்குப் பிறகு, ஆய்வகத் தொகுதி வெற்றிகரமாக ஏவூர்தியிலிருந்து பிரிந்து, திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த ஏவுதல் பணி இனிதே வெற்றி பெற்றுள்ளதை இது காட்டுகிறது.

நடப்பு ஏவுதல், சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத் திட்டப்பணி நடைமுறைக்கு வந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட 24ஆவது கடமை ஆகும். வென்தியன் ஆய்வகத் தொகுதி, சீன விண்வெளி நிலையத்தின் 2ஆவது விண்கலப் பகுதியும் முதலாவது அறிவியல் ஆய்வகத் தொகுதியும் ஆகும். மூன்று பகுதிகளைக் கொண்டுள்ள இத்தொகுதியின் எடை சுமார் 23 டன்னாகும். திட்டமிட்ட நடைமுறையின்படி, இந்த ஆய்வகத் தொகுதி விண்வெளி நிலையத்தின் மையப் பகுதியுடன் இணையும். அதனைத் தொடர்ந்து ஷென்சோ-14 விண்கலன் பணிக் குழுவினர்கள் அதற்குள் நுழைந்து பணிபுரிவார்கள்.