போஸ்னியா முதல் தொகுதி குடியேறியவர்களை மீண்டும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியுள்ளது
2022-08-01 18:46:07

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நாடு,பாகிஸ்தானிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் முதல் குழுவை அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளதாக, அந்நாட்டின்  பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

2020 ஆம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தானுடன் கையெழுத்திட்ட மறு நுழைவு அமைதி ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்துள்ளது என்று போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல், பல்லாயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தோர், ஐரோப்பாவுக்கான முக்கிய இடம்பெயரும் பாதைகளில் ஒன்றான பால்கன் பாதை வழியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்குள் நுழைய முயன்று வருகின்றனர்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில், மொத்தம் 3,865 புலம் பெயர்ந்தோர் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் குறைவாகும். மொத்த புலம் பெயர்ந்தவர்களில், சுமார் 76 சதவீதம் பேர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.