இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஓராண்டில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிப்பு
2022-08-14 17:07:00

இவ்வாண்டின் ஜூலை மாதத்தில், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிப்புடன் 3000 கோடி அமெரிக்கா டாலராக உயர்ந்துள்ளது என்று இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்த்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகப் பொருட்களின் விலை உயர்வால் உந்தப்பட்ட இறக்குமதியின் அதிகரிப்பு, வர்த்தகப் பற்றாக்குறையின் உயர்வுக்கு காரணம் என்று கருதப்படுகிறது.

தரவுகளின்படி, சரக்கு ஏற்றுமதி ஜூலை மாதத்தில் 2.1 விழுக்காடு  உயர்ந்து 3630 கோடி டாலராக இருந்தது. அதே நேரத்தில் இறக்குமதி 43.6 விழுக்காடு  அதிகரித்து 6630 கோடி டாலராக இருந்தது.

இவ்வாண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 9.5 விழுக்காடு சரிவடைந்துள்ளதாக தரவுகள்  தெரிவிக்கின்றன.

உக்ரைன் போரை அடுத்து, கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் உரங்களின் விலை உயர்ந்துள்ளது.

இது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரித்துள்ளது என்று இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறியுள்ளது.