சீனப் பல்கலைக்கழகம் மீது அமெரிக்கா இணையத் தாக்குதல்
2022-09-05 18:51:50

வடமேற்கு பாலிடெக்னிக்கல் பல்கலைக்கழகம் மீதான வெளிநாட்டு இணையத் தாக்குதல் பற்றி தேசிய கணினி வைரஸ் அவசர சமாளிப்பு மையம் மற்றும் Qihoo 360 தொழில் நுட்ப நிறுவனம் செப்டம்பர் 5ஆம் நாள் தனித்தனியாக புலனாய்வு அறிக்கைகளை வெளியிட்டன. இவ்வறிக்கைகளின்படி, இத்தாக்குதலின் ஊற்றுமூலம் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு நிறுவனமாகும். வடமேற்கு பாலிடெக்னிக்கல் பல்கலைக்கழகம் மீதான இணையத் தாக்குதலில், இந்நிறுவனத்தின் கீழுள்ள சிறப்பு அணுகல் செயல்பாட்டுப் பணியகம் இணையத் தாக்குதலுக்கான 40க்கும் மேற்பட்ட சிறப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி, தொடர்ச்சியான தாக்குதல் தொடுத்து, இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய இணையச் சாதன உருவ அமைப்பு, மேலாண்மை முறைமைத் தரவு, செயல்பாடு மற்றும் பராமரிப்புத் தரவு உள்ளிட்ட மையத் தொழில் நுட்பத் தரவுகளைத் திருடியது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், அமெரிக்காவின் இச்செயல் சீனத் தேசியப் பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் தகவல் பாதுகாப்புக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, அமெரிக்கா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமான இச்செயலை உடனே நிறுத்துமாறும் சீனா வலியுறுத்துகிறது என்று தெரிவித்தார்.