சீனாவில் அறுவடை விழா : விவசாயிகளுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2022-09-22 16:20:01

5ஆவது சீன விவசாயிகளின் அறுவடை விழாவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் விவசாயிகள் மற்றும் வேளாண் துறையில் ஈடுபட்டு வருபவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், இவ்வாண்டு, மழை மற்றும் வெள்ளப்பெருக்கு, கோவிட்-19 பரவல், கடும் வெப்பம் மற்றும் வறட்சி போன்ற அறைகூவல்களைச் சமாளித்து, தானிய உற்பத்தியில் மீண்டும் அமோக அறுவடையை எதிர்பார்க்கிறோம் என்றார். பல்வேறு நிலை அரசுகள், தானிய பாதுகாப்பு மற்றும் வேளாண் துறை வளர்ச்சியை உறுதி செய்யவும், கிராமங்கள் புத்துயிர் பெறும் பணியைப் பயனுள்ள முறையில் முன்னெடுத்து, மகிழ்ச்சியான வாழ்க்கையுடன் கூடிய வசதியான மற்றும் அழகிய கிராமங்களைக் கட்டியமைக்க பாடுபடவும் வேண்டும். வேளாண்மை மற்றும் கிராமப்புறங்களின் நவீனமயமாக்கத்தில் விவசாயிகள் ஆக்கப்பூர்வமாக பங்கேற்று அருமையான வாழ்க்கைக்கு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.