இயற்கை எரிவாயு கூட்டு கொள்முதல் பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒத்த கருத்து
2022-10-13 16:42:48

ஐரோப்பிய ஒன்றியத்தின் எரியாற்றல் துறை அமைச்சர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் 12ஆம் நாள் செக் குடியரசின் தலைநகரான பிராகில் நடைபெற்றது. இயற்கை எரிவாயு விலை உயர்வு, குளிர்கால எரியாற்றல் கையிருப்பு, மின்சார சந்தையின் சீர்த்திருத்தம் உள்ளிட்ட அம்சங்கள் பற்றி இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இயற்கை எரிவாயுவைக் கூட்டாக கொள்முதல் செய்வது குறித்து ஒத்த கருத்து எட்டப்பட்டது.

தீவிர விலை உயர்வு மற்றும் ஊக வணிகத்தைத் தடுக்கும் விதமாக, 2023ஆம் ஆண்டு முதல் இயற்கை எரிவாயு கூட்டாக கொள்முதல் செய்வதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் இயற்கை எரிவாயு விலை வரம்பை மாற்ற வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் ஒருமனதாகக் கருதினர்.

ரஷியா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நடவடிக்கையால் ஏற்பட்ட பின்விளைவின் பாதிப்பால், ஐரோப்பாவில் எரியாற்றல் விநியோக பற்றாக்குறை தோன்றியுள்ளது. இயற்கை எரிவாயு மற்றும் மின்சார விலை பெரிதும் அதிகரித்து கடும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவரப் பணியகம் செப்டம்பர் 30ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, செப்டம்பர் யூரோ பகுதி நாடுகளின் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 10விழுக்காடு அதிகரித்து வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.