சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் ஷிச்சின்பிங் வழங்கிய அறிக்கை
2022-10-16 16:59:38

சீனாவின் ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு அக்டோபர் 16ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. இம்மாநாட்டுக்கு ஷிச்சின்பிங் கட்சியின் 19ஆவது மத்தியக் கமிட்டியின் சார்பில் அறிக்கையை வழங்கினார்.

கடந்த 5 ஆண்டுகளின் பணிகளும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு சீனாவில் ஏற்பட்ட மாபெரும் முன்னேற்றங்களும் இவ்வறிக்கையில் தொகுக்கப்பட்டு, புதிய யுகத்தின் புதிய பயணத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவின் வளர்ச்சிக்கு இரண்டு நூற்றாண்டு இலக்குகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்ணயித்துள்ளது. குறிப்பிட்ட வசதியுடைய சமூகத்தை முழுமையாக உருவாக்கும் முதல் இலக்கு கடந்த ஆண்டில் நனவாக்கப்பட்டுள்ளது. நவ சீனா நிறுவப்பட்டதன் 100ஆவது ஆண்டு நிறைவின்போது சீனாவை நவீன சோஷலிச வல்லரசாகக் கட்டமைக்கும் இரண்டாவது இலக்கிற்கு இவ்வறிக்கையில் விவரமான பணி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, இப்புதிய பயணத்துக்கு வரும் 5 ஆண்டுகள் மிக முக்கியமான காலமாகும் என்றும் குறிப்பிடப்பட்டது.

உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவது, நவீன கட்டுமானத்துக்கான திறமைசாலிகளின் ஆதரவுகளை வலுப்படுத்துவது, மக்களே உரிமையாளர் என்ற தகுநிலையை உறுதிப்படுத்துவது, நாட்டின் சட்டப்படியான கட்டுமானத்தை மேம்படுத்துவது, மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமூக அமைதியைப் பேணிக்காப்பது, மனிதகுல பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவது உள்ளிட்ட துறைகளைக் கருத்தில் கொண்டு, புதிய கருத்துக்கள், நெடுநோக்குத் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் இவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.