சிபிசியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான முதலாவது செய்தியாளர் சந்திப்பு
2022-10-17 17:29:52

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் ஊடக மையத்தில் முதலாவது செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. புதிய வளர்ச்சி கருத்தைச் செயல்படுத்தி உயர்தர வளர்ச்சியை ஊக்குவிப்பது பற்றியும் சீனத் தனிச்சிறப்புடைய நவீனமயமாக்கத்துடன் தேசத்தின் மாபெரும் வளர்ச்சியை முன்னேற்றுவது குறித்தும் அறிமுகம் செய்யப்பட்டது.

தானிய உணவுப் பாதுகாப்பு பற்றி சீனத் தேசிய உணவு மற்றும் கையிருப்பு நிர்வாகத் தலைவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் திறன் உயர்ந்து வருகிறது. ஆண்டுக்கான தானிய உற்பத்தி அதிகரிப்புடன் சந்தை இயக்கம் சீராக உள்ளது. உலக உணவுச் சந்தை பதற்றமாக இருக்கும் நிலையில், சீன உணவுச் சந்தை போதுமான வினியோகத்தை நிலைநிறுத்தி, பொது மக்களின் தேவையை நிறைவு செய்வதோடு, பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிக்கும் சமூக அமைதிக்கும் பங்காற்றியுள்ளது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியை சீனா தொடர்ந்து செவ்வனே மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

எரியாற்றல் பாதுகாப்பு பற்றி தேசிய எரியாற்றல் நிர்வாகத்தின் துணைத் தலைவர் கூறுகையில், சீனாவின் எரியாற்றல் தன்னிறைவு விகிதம் 80 விழுக்காட்டுக்கு மேல் இருந்து வருகிறது. இது, உயர்தர வளர்ச்சிக்கு வலுவான உத்தரவாதம் அளிக்கிறது. புதிய நிலைமையில் புதுப்பிக்கவல்ல எரியாற்றலை வளர்த்து, கரி குறைந்த பசுமையான வளர்ச்சியை முன்னேற்ற சீனா பெரும் முயற்சியுடன் செயல்படும் என்று குறிப்பிட்டார்.

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் பொருளாதார நிலைமை பற்றி கூறுகையில், இவ்வாண்டில் சீனப் பொருளாதாரம் ஏற்றத்தாழ்வைச் சந்தித்த போதிலும், வளர்ந்து வரும் போக்கை நிலைநிறுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கான பன்முகத் திறப்பை உறுதியுடன் விரிவாக்கும் சீனா, மேலும் திறந்த, சமமான மற்றும் கூட்டு வெற்றி பெறக் கூடிய திசையை நோக்கி பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தை முன்னேற்றும் என்று தெரிவித்தார்.