ஷி ச்சின்பிங்கிற்கு பல நாடுகளின் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து
2022-10-24 10:50:15

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷி ச்சின்பிங்கிற்கு உலக நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் கூறுகையில், சீனாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான உன்னத குறிக்கோள் வெற்றிகரமாக நனவாக்கப்படுவதற்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டில் உருவாக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் துணை புரியும். உங்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்றும் நெருங்கிய ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, ரஷிய-சீனப் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புகிறேன் என்றார்.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவரும், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவருமான சிரில் ரமஃபோசா கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு, கட்சி மற்றும் நாட்டின் புதிய வளர்ச்சிப் போக்கிற்கு புதிய திசையை வழிகாட்டியுள்ளது. உங்கள் தலைமையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுடனான உறவு நாளுக்கு நாள் ஆழமாகி வருகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கிய ஆதரவு மற்றும் வழிகாட்டலுக்கு நன்றி என்றார்.

தவிரவும், வட கொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளர் கிம் ஜோங்-உன், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் நுயென் பு ட்ரோங், லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் தோங்லோன் சிசோலித், கியூபா கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் முதன்மை இயக்குநரும், அரசுத் தலைவருமான மிகுவல் டயஸ்-கேனல் பெர்முடெஸ் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.