ஆப்பிரிக்காவுக்கு உதவியளிக்கும் முன் அதன் மீதான தடையை அமெரிக்கா முதலில் நீக்க வேண்டும்
2022-10-27 10:38:28

அக்டோபர் 25ஆம் நாள், தெற்கு ஆப்பிரிக்க வளர்ச்சி சமூகத்தால் தடை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அமெரிக்கா உள்பட மேலை நாடுகள் ஜிம்பாப்வே மீதான தடை நடவடிக்கைகளை நீக்க வேண்டும் என்று பல ஆப்பிரிக்க நாடுகள் மீண்டும் வேண்டுகோள் விடுத்தன.

ஜிம்பாப்வே மீதான அமெரிக்காவின் ஒருசார்ப்பு தடை நடவடிக்கைகள் 20 ஆண்டுகளுக்கும் மேல் நிலவியுள்ளன. புள்ளிவிவரங்களின்படி, கடந்த 20 ஆண்டுகளில் வெளிப்புற தடை நடவடிக்கைகளால் ஜிம்பாப்வேக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு 4000 கோடி அமெரிக்க டாலருக்கு மேலாகும்.

ஜிம்பார்வே மீதான அமெரிக்காவின் தடையானது, ஆப்பிரிக்க நாடுகளில் அதன் நீண்டகால தலையீட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. நடப்பு அமெரிக்க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்பிரிக்காவுக்கு ஒத்துழைப்புக்கான அறிகுறியைக் காட்டி வருகிறது. ஆனால், பெரிய நாடுகளுக்கிடையில் போட்டியை அமெரிக்கா வேகமாகத் தூண்டும் நிலையில், ஆப்பிரிக்கா மீதான அதன் புதிய நெடுநோக்கு, ஒத்துழைப்பின் பெயரில் ஆப்பிரிக்காவை தனது நெடுநோக்கு நலனுக்குச் சேவைபுரியும் கருவியாக உருவாக்குவதன் நோக்கத்தில் உள்ளது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

தற்போதைய உக்ரைன் நிலைமை, உணவுப் பாதுகாப்பு, எரியாற்றல் உள்ளிட்டவை தொடர்பான நெருக்கடிகளால், பொருளாதார வளர்ச்சி அடையப் பாடுபடும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கூட, அமெரிக்காவைத் தலைமையாக கொண்ட மேலை நாடுகள் அவற்றின் வளர்ச்சிப் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து தடை நடவடிக்கையை அதிகரித்து வருகின்றன.

ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்காவின் உதவி உண்மையா என்பதற்கு சான்றுகள் தேவை. ஆப்பிரிக்காவுடன் ஒத்துழைப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் முன், அங்குள்ள சில நாடுகளின் மீதான தடை நடவடிக்கைகளை அமெரிக்கா முதலில் நீக்க வேண்டும்.