இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் பலி!
2022-10-31 10:32:46

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொங்கும் பாலம் இடிந்து விழும் நேரத்தில் இதில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இறந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது, மேலும் கிட்டத்தட்ட 50 பேர் இன்னும் காணவில்லை என்று உள்ளூர் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் ஆகியவற்றின் பல குழுக்கள் விபத்து நடந்த இடத்திற்க்கு மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இடிந்து விழுந்த தொங்கும் பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு முன்பு இப்பாலம் பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது என்று ட்ரிப்யூன் செய்தித்தாள் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.