இந்தியாவில் பாலம் இடிந்து விழுந்ததற்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ஆழ்ந்த வருத்தம்
2022-11-01 14:23:24

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில், தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் மிகுந்த வருத்தம் அடைந்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் திங்களன்று தெரிவித்தார். இதனிடையில், இக்கோர சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக, சில இளைஞர்கள் வேண்டுமென்றே பாலத்தை அசைக்கும் காட்சி, சிசிடிவியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. 

பாலம் இடிந்து விழுவதற்கு சற்று முன்பு பிடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் சில செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. அந்த  காட்சியில் சில இளைஞர்கள் குழு தங்கள் கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்துக்கொண்டு பாலத்தை அசைக்க முயன்றனர். அதைத் தொடர்ந்து, பாலத்தின் கம்பிகள் திடீரென அறுந்து அதில் இருந்த மக்கள் நதியில் விழுந்தனர்.

பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த குஜராத் மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.