ஆப்பிரிக்காவுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் சீனாவின் வளர்ச்சி
2022-11-05 18:47:59

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் தான்சானிய அரசுத் தலைவர் ஹாசன் அம்மையருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பும் கூட்டறிக்கையை வெளியிட்டு, ஒத்துழைப்பு ஆவணங்கள் பலவற்றில் கையொப்பமிட்டன. புதிய யுகத்தில் சீன-தான்சானிய ஒத்துழைப்பையும், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பையும் ஆழமாக்குவதற்கு இது வலுவான இயக்காற்றலை வழங்குகிறது.

தான்சானிய அரசுத் தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு சீனா வரவேற்ற முதலாவது ஆப்பிரிக்க நாட்டு தலைவர் ஆவார். இருதரப்பு உறவின் நெருக்கத்தை இது முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகளில் வறுமையாக இருந்த சீனா தான்சானியாவுக்கு உதவியாக இருப்புப்பாதையை கட்டியமைத்தது. அந்நாட்டு மக்கள் சீனர்களை தங்கள் உற்றார் உறவினர் என அழைக்கின்றனர்.

தானிசானியாவின் வளர்ச்சிப் பாதையில் சீனா அதன் நல்ல கூட்டாளியாகும். நீண்டகாலமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவுக்கு சீனா பல முதலீடுகள் மற்றும் உதவித் திட்டங்களை வழங்கியுள்ளது.

புள்ளிவிபரங்களின்படி, 2009ஆம் ஆண்டிலிருந்து, சீனா தொடர்ந்து 13 ஆண்டுகளாக ஆப்பிரிக்காவின் முதலாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகத் திகழ்கிறது. சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக்கான 9 திட்டப்பணிகள் தற்போது சீராக நடைபெற்று வருகின்றன.

புதிய யுகத்தில் வலுவடைந்து வரும் சீன-ஆப்பிரிக்க பொது சமூகம், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலும் பெரும் ஆற்றலை வழங்கும்.