பேசிக் குழு நாடுகளின் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர் நிலை கூட்டம்
2022-11-17 11:13:25

COP27 எனப்படும் காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா. கட்டுக்கோப்பு ஒப்பந்தத் தரப்புகளின் 27ஆவது மாநாடு எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய 4 முக்கிய வளரும் நாடுகளைக் கொண்டு உருவான பேசிக் குழுவின் காலநிலை மாற்றம் பற்றிய 31ஆவது அமைச்சர் நிலை கூட்டம் நவம்பர் 15ஆம் நாள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், காலநிலை மாற்றச் சமாளிப்பில் தங்கள் நாட்டின் முன்னேற்றங்கள் பற்றியும், COP27 மாநாட்டின் வெற்றியைக் கூட்டாக ஊக்குவிப்பது குறித்தும், இந்த 4 நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், COP27 மாநாட்டில் உலகளாவிய ஏற்பு இலக்கு தொடர்பான பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைய வேண்டும். இதன் மூலம் COP28 மாநாட்டில் செயலாக்கக் கூடிய பேரார்வமுள்ள உலகளாவிய ஏற்பு இலக்கை எட்டுவதற்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.