வளர்ந்த நாடுகள் தங்கள் கடமைகளைச் செயல்படுத்துவது முக்கியமானது
2022-11-22 12:45:00

ஐ.நா. காலநிலை மாற்ற மாநாடு நவம்பர் 20ஆம் நாள் எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நிறைவடைந்தது. இந்த உச்சிமாநாட்டில் பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில், சாதனையாக, வளரும் நாடுகளும் பலவீனமான நாடுகளும் காலநிலை மாற்றத்தால் சந்தித்து வரும் இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் நிதியை நிறுவுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் மிக பெரிய வளரும் நாடான சீனாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒரு யூனிட்டுக்கு சீனாவின் கரியமில வாயு வெளியேறும் அளவு 2012ஆம் ஆண்டை விட சுமார் 34.4% குறைந்துள்ளது. இது, 370 கோடி டன் கரியமில வாயு வெளியேற்றத்துக்குச் சமம்.

புதுப்பிக்கத்தக்க எரியாற்றலுக்கான சீனாவின் ஒட்டுமொத்த முதலீடு 38 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது, இது உலகில் முதல் இடத்தில் உள்ளது.

2020ஆம் ஆண்டுக்குள் அதன் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் வாக்குறுதியை நிறைவேற்றிய அடிப்படையில் கரியமில வாயு வெளியேறும் அளவு 2030 ஆண்டுக்குள் உச்சத்தை அடையவும் 2060 ஆண்டுக்குள் கார்பன் நடுநிலையை அடையவும் சீனா பாடுபடும் என்று இந்த உச்சிமாநாட்டில் சீனப் பிரதிநிதி தெரிவித்தார்.

வெறும் முழக்கங்களால் மட்டும் பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கை அடைய முடியாது, மாறாக செயல்களால்தான் அடைய முடியும். காலநிலை மாற்ற நடவடிக்கை இன்னும் பல இன்னல்களை எதிர்கொள்கிறது. வளர்ந்த நாடுகள் தங்கள் கடமைகளைச் செயல்படுத்த வேண்டும் என்பது முக்கியமானது.