ஈரானில் 60% செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தி அதிகரிப்பு
2022-11-23 10:09:37

60 விழுக்காடு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் உற்பத்தி அளவை அதிகரித்துள்ளதாக ஈரான் அணு ஆற்றல் அமைப்பு 22ஆம் நாள் தெரிவித்தது. சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆளுநர் குழு ஏற்றுக்கொண்ட தொடர்புடைய தீர்மானத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என்று கூறப்பட்டது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை முன்வைத்த இத்தீர்மானத்தில் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்திடம் அறிவிக்காத இடத்தில் கண்டறிந்த யுரேனிய நடவடிக்கை பற்றி மேற்கொள்ளப்படும் புலனாய்வுக்கு ஈரான் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால், இந்தத் தீர்மானம் குறிப்பிட்ட அரசியல் இலக்குடன் உள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கனானி குறைகூறியது.

2015ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் எட்டப்பட்ட ஈரான் அணு பிரச்சினை தொடர்பான பன்முக ஒப்பந்தத்தில், 3.67 விழுக்காட்டுக்கும் குறைவான யுரேனிய செறிவூட்டல் செய்வதாக ஈரான் வாக்குறுதி அளித்தது. அதற்குப் பதிலாக சர்வதேச சமூகம் ஈரான் மீதான தடைகளை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால், 2018ஆம் ஆண்டு அமெரிக்கா இவ்வொப்பந்தத்திலிருந்து விலகிய பிறகு, ஈரான் மீது புதிய தடை நடவடிக்கை மேற்கொள்ளத் துவங்கியது.