சீனா மீதான தடை பற்றி நெதர்லாந்தின் கருத்து
2022-11-24 15:39:45

சீனாவுக்கு அரை மின் கடத்திகளை விற்கும் பிரச்சினையில் நெதர்லாந்து தனது பொருளாதார நலன்களைப் பேணிக்காக்கும் விதம் செயல்படும் என்று அந்நாட்டின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்புத் துறை அமைச்சர் ஷ்ரைனர் மஹெர் கூறியதாக ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டது. கடந்த ஒரு வாரத்தில் அவர் இதைப் போன்ற கருத்து தெரிவிப்பது இது 2ஆவது முறையாகும். 

அண்மையில் அமெரிக்கா தனது கூட்டணி நாடுகளுக்கு நிர்ப்பந்தம் திணிப்பதைத் தீவிரமாக்கிய சூழலில், பெய்ஜிங்குடன் தொடர்பு மேற்கொள்ள வேண்டும் என்று பல ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் வேண்டுகோள் விடுத்து, அரை மின் கடத்தி மூலம் சீனாவின் மீது தடை மேற்கொள்ளும் குழுவில் சேர மறுத்துள்ளனர்.

இந்த உலகை ஒன்றோடு ஒன்று போட்டியிடும் குழுக்களாகப் பிரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோன் மற்றும் ஜெர்மன் தலைமை அமைச்சர் ஸ்கோல்ஸ் அண்மையில் தெரிவித்தனர்.

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் சித்தாந்தத்தையும் விழுமியத்தையும் சேர்ப்பது சர்வதேச சமூகத்தின் பொது நலன்களைப் பாதிக்கும் அதேவேளையில், தனக்கும் இழப்பை ஏற்படுத்தும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லிச்சியேன் 23ஆம் நாள் தெரிவித்தார்.