அமெரிக்க பணவீக்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு ஐரோப்பா அதிருப்தி
2022-12-04 17:24:39

டிசம்பர் 2ஆம் நாள் பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோன் 3 நாட்கள் நீடித்த அமெரிக்க பயணத்தை முடித்துள்ளார். அமெரிக்க பணவீக்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் குறித்து ஐரோப்பியத் தொழில் நிறுவனங்களுக்கு விலக்குரிமையைக் கேட்பது, மக்ரோனின் முக்கிய நோக்கமாகும். ஆனால் அவர் மனநிறைவு தரும் முடிவு பெறாமல் திரும்பினார்.

இவ்வாண்டின் ஆக்ஸ்ட் திங்கள் பணவீக்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் கையொப்பமிட்டார். அதன்படி, மின்சார வாகனம் மற்றும் உள்நாட்டில் இதர பசுமை தொழில் நுட்பங்களின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் ஊக்குவிக்கும் விதமாக, உயர் தொகை மானியம் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் வெளியிடப்பட்டன. இச்செயல், ஐரோப்பிய நாடுகளிடையில் பெரும் மனநிறைவின்மையை ஏற்படுத்தியது. இச்சட்டத்தில் இடம்பெற்ற வர்த்தகப் பாதுகாப்புவாதம், உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறியது என்று ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

பொருளாதார நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினையில், அமெரிக்கா எப்போதும் சொந்த நலனை முதலில் கருத்தில் கொள்வது பற்றி, ஐரோப்பிய மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் என ஒரு ஜெர்மன் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.