சீன-அமெரிக்க அதிகாரிகளின் பரிமாற்றம்
2022-12-14 16:29:46

சீனத் துணை வெளியுறவு அமைச்சர் சியே ஃபெங், சீனாவில் பயணம் மேற்கொண்ட ஆசிய-பசிபிக் விவகாரங்களுக்கான  அமெரிக்கத் துணை வெளியுறவு அமைச்சர் டேனியல் கிரிட்டன்ப்ளிங்க், சீன விவகாரத்துக்கான வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் உயர்நிலை இயக்குநர் லாரா ரோசன்பெர்கர் ஆகியோருடன் டிசம்பர் 11 மற்றும் 12ஆம் நாட்களில் ஹெபே மாநிலத்தின் லாங்பாங் நகரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீன  வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வேபின் 13ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் இப்பேச்சுவார்த்தை பற்றி கூறுகையில், சீன-அமெரிக்க உறவில் தைவான் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள், இரு தரப்புத் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் முதலியவை குறித்து அதிகாரிகள் விவாதித்தனர். பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இதில் சீனாவும் அமெரிக்காவும் கருத்து வேற்றுமையை உரிய முறையில் கையாள வேண்டும் என்று சீனா கருத்து தெரிவித்தது. பூஜ்ய தொகை விளையாட்டு என்ற பனிப்போர் சிந்தனையைக் கைவிட வேண்டும் என்றும், சித்தாந்தம் எதிர்ப்பு மற்றும் தொழில்நுட்ப அடக்குமுறை போன்ற தவறான செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

இப்பேச்சுவார்த்தை மனம் திறந்த மற்றும் ஆக்கபூர்வ முறையில் நடைபெற்றது என்று இரு தரப்பினரும் ஒருமனதாகக் கருதுவதாக வாங் வேன்பிங் கூறினார். தொடர்பை நிலைநிறுத்தி, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களைக் கூட்டாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இரு தரப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன.