ரஷியா மீது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா புதிய தடை
2022-12-16 11:12:19

ஐரோப்பிய ஒன்றியத்தின் குளிர்கால உச்சிமாநாடு டிசம்பர் 15ஆம் நாள் பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் நிறைவடைந்தது. இம்மாநாட்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், ரஷியா மீதான 9ஆவது சுற்று தடை திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 16 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ ஒழுங்கு முறை மூலம் இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என்று ஐரோப்பியப் பேரவையின் தலைவர் மிஷேல் இவ்வுச்சிமாநாட்டுக்குப் பிறகு தெரிவித்தார். தவிரவும், 2023ஆம் ஆண்டு உக்ரைனுக்கு 1800 கோடி யூரோ மதிப்புள்ள நிதியுதவியை வழங்குவதற்கும்,  ஐரோப்பிய ஒன்றியத்தின் இருக்கைக்கு இலக்காகும் நாடாக, பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

அதே நாள் ரஷியாவின் தனிநபர் மற்றும் தொழில் நிறுவனங்களின் மீது புதிய சுற்று தடை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமெரிக்க நிதித்துறை அமைச்சகம் அறிவித்தது. தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய பெயர் பட்டியலில் ரஷிய உலோக உருக்காலை துறை தொழிலதிபர் விளாடிமிர் பொடானின், ராஸ் வங்கி முதலியோர் இடம்பெறுகின்றனர்.

அதே நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், விளாடிமிர் பொடானின் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள், ரஷியாவின் 20க்கும் மேலான மாநில ஆளுநர்கள், ரஷிய இருப்புப்பாதை தொழில் நிறுவனத்தின் இயக்குநர் குழுவினர்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர் மீது தடை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.