ஆசிய வளர்ச்சி வங்கியுடன் இந்தியா 1200 கோடி டாலர் ஒப்பந்தம்
2023-01-04 11:22:05

122 கோடி டாலர் மதிப்பில் 4 கட்டமைப்புத் திட்டங்கள் தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்தியாவும் செவ்வாய்க்கிழமை கடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கையெழுத்தான 4 கட்டமைப்புத் திட்டங்களானவை தமிழகம், திரிபுரா, அசாம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய நான்கு மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. அவை, மெட்ரோ ரயில், மின்னாற்றல், சாலை வசதி மற்றும் பொருளாதார மண்டலங்களை ஆகிய திட்டங்களில் முதலீடு செய்யப்பட உள்ளன.

ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனில் இருந்து சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 35 கோடி டாலர் நிதி ஒதுக்கப்படும் என்று நிதி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல், திரிபுரா மாநிலத்தின் மின்னாற்றல் திட்டத்துக்கு 22 கோடி டாலரும், அசாமின் சாலை வசதி மேம்பாட்டுக்கு 30 கோடி டாலரும், மகாராஷ்டிரத்தில் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு 35 கோடி டாலரும் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.