மார்ஷல் தீவு மக்களிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்
2023-01-13 11:56:31

1940 மற்றும் 1950ஆம் ஆண்டுகளில் மார்ஷல் தீவுகளில் அமெரிக்கா பெரிய அளவிலான அணுசக்தி சோதனைகளை நடத்தியது.  இது தொடர்பாக அண்மையில், 100க்கும் மேற்பட்ட ஆயுதக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிற அமைப்புகள் அமெரிக்க அரசுக்குக் கடிதம் அனுப்பி, அதன் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. அதில், மார்ஷல் தீவிடம் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இது சர்வதேச சமூகத்தின் நியாயமான குரல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அணு ஆயுதப் பரவலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா பொது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.  

1946ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரை அமெரிக்கா மார்ஷல் தீவுகளில் 67 அணு சோதனைகளை நடத்தியதாக 2019 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தீவுகளின்  சுற்றுச்சூழல் சரிசெய்யமுடியாத அளவு  சேதமடைந்துள்ளது. பல குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதனிடையே, மார்ஷல் தீவுகளுக்கு அமெரிக்கா 230 கோடி அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சர்வதேச நடுவர் தீர்ப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இத்தீர்ப்பை அமெரிக்கா நிராகரித்து, மார்ஷல் தீவுகளுக்கு 40 இலட்சம் அமெரிக்க டாலர் மட்டுமே செலுத்தியுள்ளதையும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் வரலாற்றுப் பொறுப்பை ஏற்றுவதுடன் மிக அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள அமெரிக்கா ஆபத்தான அணு ஆயுதப் பரவல் நடைமுறைகளையும் நிறுத்த வேண்டும்.