சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் உயிர்ச்சக்தி
2023-01-14 17:32:47

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 13ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2022ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் தொகை 40 இலட்சம் கோடி யுவானை முதன்முறையாகத் தாண்டியுள்ளது. தொடர்ந்து 6 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய சரக்கு வர்த்தக நாடுகளின் தகுநிலையைச் சீனா நிலைநிறுத்தி வருகின்றது.

2022ஆம் ஆண்டு, உலகளாவிய பொருளாதார மந்தநிலை, இடர்ப்பாடு அதிகரித்து வருவது, வெளிப்புற தேவை வளர்ச்சி தொடர்ந்து குறைந்து வருவது, தொற்றுநோய் பாதிப்பு ஆகியவற்றின் சூழ்நிலையில் இத்தகைய வெளிநாட்டு வர்த்தகச் சாதனைகளைப் பெறுவது எளிதல்ல. இடர்பாட்டு அறைகூவல்களைச் சமாளிக்கும் சீனப் பொருளாதாரத்தின் நெகிழ்வுத்தன்மையையும் உயிர்ச்சக்தியையும் இது காட்டுகின்றது.

2022ஆம் ஆண்டில் ஆசியான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முதலிய முக்கிய வர்த்தகக் கூட்டாளி நாடுகளுக்குச் சீனாவின் ஏற்றுமதி விரைவான வளர்ச்சியை நிலைநிறுத்தி வருகின்றது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுக்குச் சீனாவின் ஏற்றுமதித் தொகை 20 விழுக்காட்டை அதிகரித்துள்ளது. உலக சந்தை சீன தயாரிப்புகளைப் புறகணிக்க முடியாது. உலக தொழிற்சாலை என்ற சீனாவின் தகுநிலை ஈடு செய்யப்படவும் முடியாது.

தொற்றுநோயின் பாதிப்பு இருந்தாலும், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் வலுவான உற்பத்தி திறன் மற்றும் முழுமையான விநியோக சங்கிலியின் நன்மைகளை முழுமையாக  வெளிக்கொணர்ந்து, உலகளாவிய விநியோக பற்றாக்குறையைப் பயனுள்ள முறையில் ஈடுசெய்கிறது. உலக வர்த்தக மற்றும் உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்குச் சீனா முக்கிய பங்காற்றி வருகின்றது.