தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்குச் சீனாவின் பங்கு
2023-01-16 18:47:24

அண்மையில், சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் இயக்குநர் மா சியாவோய், உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். சீனாவின் தற்போதைய தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். இந்த தொடர்புக்கு உலகச் சுகாதார அமைப்பு நன்றி தெரிவித்ததோடு, அதே நாளில் சீனா வெளியிட்ட ஒட்டுமொத்த தொற்றுநோய் தகவல்களுக்கு வரவேற்பும் தெரிவித்தது.

கடந்த சுமார் ஒரு திங்கள் காலத்தில் உலகச் சுகாதார அமைப்புடன் தொழில்நுட்ப ரீதியான 5 பரிமாற்றங்களையும் ஒரு தொடர்பையும் சீனா நடத்தியது.

உலகளாவிய ஒற்றுமை மற்றும் தொற்றுநோய்க்கு எதிரான சீனாவின் ஆக்கப்பூர்வப் பங்களிப்பு, உலகச் சுகாதார மற்றும் சர்வதேச சமூகத்தால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று ஜனவரி 16ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.

அனைத்து தரப்புகளும் அறிவியல் மற்றும் புறநிலை நிலைப்பாட்டுடன் சீனாவின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகளை மதித்து ஆதரித்து, உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு உரிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.