ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் சாதனை
2023-01-16 14:03:45

சீனா முன்மொழிந்த முதல் பலதரப்பு வங்கியான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தொடங்கப்பட்டு ஜனவரி 16ஆம் நாளோடு 7 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 7 ஆண்டுகளில் 30க்கும் மேலான நாடுகளின் அடிப்படை வசதிகளின் ஆக்கப்பணிக்கு இவ்வங்கி ஆதரவு அளித்து உள்ளூர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, 2016 முதல் 2022ஆம் ஆண்டு வரை, உள்கட்டமைப்பு கட்டுமானம், உள்ளூர் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, பொது மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு ஆகியவற்றுக்காக, இவ்வங்கி 202 திட்டப்பணிகளை அங்கீகரித்து, 3880 கோடி டாலருக்கு மேலான முதலீட்டைத் திரட்டியுள்ளது. எரியாற்றல், போக்குவரத்து, நீர்வளம், தொலைதொடர்பு, கல்வி, பொது சுகாதாரம் ஆகிய துறைகளின் தொடரவல்ல உள்கட்டமைப்பு கட்டுமானத்திலும் உறுப்பு நாடுகளின் பசுமையான பொருளாதார வளர்ச்சியிலும் பங்காற்றும் இத்திட்டப்பணிகள் 33 நாடுகளில் அமைந்துள்ளன.

2022ஆம் ஆண்டு இறுதியில் ஆப்பிரிக்க நாடான மௌரித்தானியா இவ்வங்கியின் புதிய உறுப்பினராக இணைந்தது. அதனையடுத்து வங்கியின் உறுப்பினர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்து, உலக வங்கிக்கு அடுத்த உலகளவில் 2ஆவது பெரிய வங்கியாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.