2022 சீனப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிலைமை
2023-01-17 11:40:48

சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் ஜனவரி 17ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், 2022ஆம் ஆண்டு சீனத் தேசிய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிலைமை அறிமுகம் செய்யப்பட்டது.

பூர்வாங்க கணிப்பின்படி, 2022ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1 கோடியே 21 லட்சத்து 2070 கோடி யுவானை எட்டி, 2021ஆம் ஆண்டை விட 3 விழுக்காடு அதிகரித்தது.

மேலும், கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த தானிய உற்பத்தி அளவு 68 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரம் டன்னை எட்டி, 2021ஆம் ஆண்டை விட 0.5 விழுக்காடு அதிகரித்தது. இதனிடையே, இறைச்சி உற்பத்தி அளவு 9 கோடியே 22 லட்சத்து 70 ஆயிரம் டன்னை எட்டி, முந்தைய ஆண்டை விட 3.8 விழுக்காடு அதிகரித்தது.

தவிரவும், கடந்த ஆண்டு முழுவதும் சீனாவின் நகரங்களில் புதிதாக அதிகரித்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். முழு ஆண்டிற்கான இலக்கை இது தாண்டியுள்ளது. கடந்த டிசம்பரில் நாட்டின் நகரங்களில் வேலையின்மை விகிதம் 5.5 விழுக்காடாகப் பதிவாகி, நவம்பரில் இருந்ததை விட 0.2 விழுக்காட்டு புள்ளிகள் குறைந்தன. கடந்த ஆண்டில் சீனாவில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 29 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். முந்தைய ஆண்டை விட இது 1.1 விழுக்காடு அதிகம். அவர்களின் சராசரியான திங்கள் வருமானம் 4515 யுவானை எட்டி, முன்பை விட 4.1 விழுக்காடு அதிகரித்தது.