இந்தியாவின் பணவீக்கமும் ஏற்றுமதியும் குறைவு
2023-01-17 09:54:46

இந்தியாவின் மொத்த விற்பனை விலை குறியீட்டுப் பணவீக்கம் 2022ஆம் ஆண்டு நவம்பரில் இருந்த 5.8 விழுக்காட்டிலிருந்து டிசம்பரில் 4.95 விழுக்காடாகக் குறைந்தது. கடந்த 22 மாதங்களில் காணப்பட்ட மிகக் குறைவான பதிவு இதுவாகும் என்று வணிக மற்றும் தொழில் அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

உணவுப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலையின் குறைவானது, இந்த பணவீக்கத்தின் குறைவுக்கு முக்கிய காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிக மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்ட வேறு தரவுகளின்படி, கடந்த டிசம்பரில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி, 2021ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.25 விழுக்காடு குறைந்து, 6182 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இதனிடையே, மொத்த இறக்குமதி தொகை 2021ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்த 7527 கோடி டாலரிலிருந்து 7380 கோடி டாலராகக் குறைந்தது. இந்நிலையில், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2021ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்த 1002 கோடி டாலரிலிரந்து 1198 கோடி டாலராக அதிகரித்துள்ளது.