அமெரிக்காவில் மீண்டும் வேதனைக்குள்ளாக்கப்படும் ஆப்பிரிக்க வம்சாவழியினர்
2023-01-30 16:00:03

55 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் ஆப்பிரிக்க வம்சாவழியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் மார்டின் லூதர் கிங், மெம்ஃபிஸ் நகரில் மறைமுகமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 55 ஆண்டுகளுக்குப் பின் தற்போது, அதே நகரில் ஆப்பிரிக்க வம்சாவழியினரான 29 வயதுடைய நிக்கொல்ஸ் 5 காவற்துறையினர்களால் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். இது அமெரிக்க முழுவதிலும் கடும் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தால் 2020ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது போன்று மீண்டும் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனநாயகத்தில் பல்லாண்டுகளாக ஆழமாக இருக்கும் இனவெறியின் காரணமாகவே இன்றும் கூட ஆப்பிரிக்க வம்சாவழி மக்கள், அமெரிக்கக் காவற்துறையினர்களால் மோசமாக நடத்தப்படுகின்றனர்.  இதற்கிடையில், அந்நாட்டில் காணப்படும்   கட்சிகளிடையிலான சண்டை, அமெரிக்கக் காவல் முறைமையின் சீர்திருத்தத்தைத் தாமதம் ஆக்குகின்றது. இவற்றைத் தவிர, துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறை சட்ட அமலாக்கம் உள்ளிட்டவையும்  மோசமான சூழலை உருவாக்கியுள்ளன.

இதனிடையில், சமத்துவம் மற்றும் நியாயம் குறித்த மார்டின் லூதர் கிங்கின் கனவும் இன்னும் நனவாகவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், அமெரிக்கா தன் ஆத்மாவுக்காகப் போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஆனால், அமெரிக்க “ஆத்மா”எங்கே இருக்கின்றது என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது.