கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மீதான தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்
2023-02-09 11:22:02

துருக்கியில் பிப்ரவரி 6ஆம் நாள் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தால் சிரியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இதுவரை 1250 பேர் உயிரிழந்தனர். அலேபோ மாநிலத்தின் தலைநகரில் மட்டும் 50 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.

போர் மற்றும் மனித நேய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களுக்கு இந்நிலநடுக்கம் மேலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு அவசர மீட்புதவி அவசியமானது. ஆனால், நீண்டகாலமாக அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் விதித்துள்ள தடை நடவடிக்கைகளின் காரணமாக சிரியாவில் மீட்பு சாதனங்கள் மிகவும் குறைவு. இதனால் மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியின் போது இரு மடங்கு நேரத்தைச் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும், பொது மக்கள் வெறும் கைகளைக் கொண்டு இடிபாடுகளில் சிக்கியுள்ளவற்றைத் தோண்டி எடுக்க வேண்டியுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இத்தகைய அவசர நிலையில் சிரிய அரபு செஞ்சிலுவை சங்கம், அமெரிக்க-அரபு இனவெறி பாகுபாடு எதிர்ப்பு கமிட்டி உள்ளிட்ட அமைப்புகள், சிரியா மீதான ஒருசார்பு தடை நடவடிக்கைகளை அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் கூடிய விரைவில் நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன. இது பற்றி, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்கா, சிரியாவின் அசாத் அரசுடன் தொடர்பு கொள்ளாமல், உள்ளூர் மனித நேய கூட்டாளிகளைத் தொடர்பு கொண்டு மட்டுமே உதவி அளிக்கும் என்று தெளிவாகத் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டில் சிரியாவின் உள்நாட்டுப் போர் மூண்ட பிறகு, அமெரிக்கா அடிக்கடி அந்நாட்டில் இராணுவ தலையீடு செய்து வருவதோடு, அதன் மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளது.  அதோடு, சிரியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவின் இத்தகைய கொள்ளைச் செயல்கள் சிரியா மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதோடு,  கடந்த பல பத்து ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளில் தன் மேலாதிக்கத்தைச் செலுத்தி வரும் அமெரிக்கா, சிரியாவுக்கு மட்டுமல்லாது துன்பத்தில் அல்லல்பட்ட மத்திய கிழக்கைச் சார்ந்த எந்தவொரு நாட்டுக்கும் தன் அனுதாபத்தைத் தெரிவித்ததில்லை.

கடும் பேரழிவை எதிர்கொள்ளும் நிலையில், மனித உரிமை, மனித நேயம் ஆகியவை பற்றி அதிகமாக குறிப்பிட விரும்பும் அமெரிக்க அரசியல்வாதிகள் நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் மத்திய கிழக்கு நாடுகளின் மக்களுக்கு அனுதாபம் மற்றும் ஆதரவு அளித்து, சிரியா மீதான ஒருசார்பு தடையை உடனே நீக்க வேண்டும்.