பிபிசி அலுவலகத்தில் வருமானவரிச் சோதனை
2023-02-15 10:21:48

தில்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர். வருமான வரி சோதனை மேற்கொண்டதாக ஊடங்களில் தகவல்கள் வெளியாகினாலும், சர்வதேச வரி மற்றும் பண பரிமாற்றத்தில் முறைகேடு போன்றவற்றில் பிபிசி ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஆய்வு நடத்த அதிகாரிகள் அங்கு சென்றதாக சில ஊடகங்கள் தெரிவித்தனர்.

இச்சோதனையில் ஆவணங்கள், கைப்பேசிகள், மடிக் கணினிகள் போன்றவை கைப்பற்றிச் செல்லப்பட்டன என்றும் சோதனை தொடர்பான தகவல்களை வெளியில் பகிரக் கூடாது என்று ஊழியர்களிடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாகவும் என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இது வெறும் ஆய்வுதானே தவிர சோதனை அல்ல, கைப்பற்றப்பட்ட கைபேசிகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தொடர்பாக இரு ஆவணப் படங்களை பிபிசி சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிபிசி அலுவலகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.