பூமிக்குத் திரும்பிய பிறகு ஷென்சோ-14 விண்வெளி வீரர்களின் முதல் செய்தியாளர் சந்திப்பு
2023-02-18 16:54:27

சீனாவின் ஷென்சோ-14 விண்வெளி பயணக் குழு கடந்த டிசம்பரில் பூமிக்குத் திரும்பியது. அதன் பிறகு, இக்குழுவினர்களின் முதலாவது அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு பிப்ரவரி 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கிடைத்த தகவலின்படி, இப் பயணக் குழுவின் வீரர்களான சென் டொங், லியூ யாங், சாய் ஷுச்சே ஆகியோர், தற்போது சீரான உடல் மற்றும் மன நிலையில் இருக்கின்றனர். தடைக்காப்பு மற்றும் நலம் பெறுதல் ஆகிய இரண்டு கட்டங்களை நிறைவேற்றிய அவர்கள், கவனிப்பு கட்டத்தில் உள்ளனர். உடல்நிலை மதிப்பீடுகளுக்குப் பிறகு, வழக்கமான பயிற்சியை அவர்கள் மீண்டும் தொடங்க உள்ளனர்.

6 மாதங்கள் தொடர்ந்த அவர்களின் விண்வெளிப் பயணத்தில், 3 விண்வெளி நடைப் பயணங்கள், நேரலை மூலமான அறிவியல் வகுப்பு, தரையிலுள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் விண்வெளி நிலையத்தின் T-வடிவக் கட்டமைப்பு பொருத்தல் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல கடமைகளை நிறைவேற்றினர் என்பது நினைவுகூரத்தக்கது.