நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பு பற்றி புறநிலை மற்றும் நியாயமான புலனாய்வு அவசியம்
2023-02-24 10:31:42

ரஷியாவின் கோரிக்கைக்கிணங்க, அண்மையில் நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்புச் சம்பவம் பற்றி ஜ.நா பாதுகாப்பவை வெளிப்படையான விவாதத்தை நடத்தியது. இவ்விவாதத்தில் வெடிப்புச் சம்பவம் குறித்து பாதுகாப்பவை உறுப்பு நாடுகள் தத்தமது நிலைப்பாட்டை விளக்கிக் கூறின. சீன தரப்பு தன் நிலைப்பாட்டைக் கூறுகையில், நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பு குறித்து புறநிலைத் தன்மை மற்றும் நியாயமுடன் கூடிய தொழில்முறை சார் புலனாய்வை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளது. இது ஒவ்வொரு நாட்டின் நலன் மற்றும் கவலையுடன் தொடர்புடையது. இதனால், புலனாய்வை விரைவுபடுத்தி அதன் உண்மையை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என்று சீனா உறுதியாக தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத இறுதியில், ஜெர்மனிக்கு இயற்கை எரிவாயு அனுப்பும் நார்ட் ஸ்ட்ரீம் குழாயின் 4 பகுதிகளில் கசிவு ஏற்பட்டன. இக்கசிவானது வேண்டுமென்றே உண்டாக்கப்பட்ட சீர்குலைவு என்று பல்வேறு தரப்புகள் கருதுகின்றன. இதையடுத்து, டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் தனித்தனியாக புலனாய்வு மேற்கொள்ளத் தொடங்கின. புலனாய்வைத் தொடங்கி 5 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் உண்மை நிலையும் பிரச்சினைக்குக் காரணமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனிடையில், பிப்ரவரி 8ஆம் நாள், அமெரிக்காவின் மூத்த புலனாய்வுச் செய்தியாளர் செய்மோர் ஹெர்ஷ் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், நார்ட் ஸ்ட்ரீம் குழாயை வெடிக்க அமெரிக்க வெள்ளை மாளிகை உத்தரவு பிறப்பித்தது என்றும், அது அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ ரகசியமான செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கை சர்வதேச சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து புறநிலை மற்றும் நியாயமான புலனாய்வு மேற்கொள்ள வேண்டிய குரல் மேலும் சத்தமாக ஒலித்து வருகின்றது.

நார்ட் ஸ்ட்ரீம் குழாயின் சீர்குலைவு உலக எரியாற்றல் சந்தை மற்றும் உயிரின சுற்றுச்சூழலுக்குக் கடும் பாதிப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. அதோடு இது ஓர் அரசியல் பிரச்சினையுமாகும். முழு ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மையுடன் அது தொடர்புடையது. இச்சம்பவம் குறித்து நடுநிலையான புலனாய்வு மேற்கொண்டு அதற்குக் காரணமானவரைக் கூடிய விரைவில் கண்டுபிடிப்பது பல்வேறு தரப்புகள் மேலும் பகுத்தறிவு முறையான நெடுநோக்கு தீர்மானம் எடுப்பதற்கும், அரசியல் பேச்சுவார்த்தை மூலம், உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதில் தடை குறைப்பதற்கும் துணையாக இருக்கும்.