2022இல் உலக வர்த்தகம் எதிர்பார்ப்பை விட சிறந்தது:WTO அறிக்கை
2023-02-24 16:58:55

உக்ரைன் நெருக்கடி தீவிரமாகிய ஓராண்டு காலத்தில் உலக வர்த்தகத்துக்கு ஏற்பட்ட தாக்கத்தை கணிக்கும் விதமான அறிக்கை ஒன்றை, உலக வர்த்தக அமைப்பு பிப்ரவரி 23ஆம் நாள் வெளியிட்டது. பூர்வாங்க மதிப்பீட்டின்படி, 2022ஆம் ஆண்டில் உலக வர்த்தக அதிகரிப்பு விகிதம் கடந்த ஏப்ரலில் வழங்கப்பட்ட கணிப்பை விட அதிகமாக இருக்கும். நெகிழ்வுத்தன்மையை வெளிக்காட்டிய உலக வர்த்தகம் எதிர்பார்ப்பை விட சிறந்த நிலையில் செயல்பட்டுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மோதலால் ஏற்பட்ட பல பொருட்களின் பற்றாக்குறை, மாற்று வினியோக முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட பொருட்களின் விலை உயர்வு எதிர்பார்ப்பை விட குறைவு என்றும் இதில் கூறப்பட்டது.

சர்வதேச ஒத்துழைப்பு சீர்குலைக்கப்பட்டால், வளர்ச்சி குன்றிய நாடுகள் மிகக் கடுமையான பாதிப்பை சந்திக்கும். எனவே தொலைநோக்கில் பார்த்தால், பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையை வலுப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது.