உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க ஜெர்மன் மக்கள் எதிர்ப்பு
2023-02-26 17:32:21

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை எதிர்த்து, அமைதி முறையில் பிராந்தியச் சர்ச்சையைத் தீர்க்க வேண்டுகோள் விடுக்கும் வகையில், பல்லாயிரக்கணக்கான ஜெர்மன் மக்கள், 25ஆம் நாள் தலைநகர் பெர்லினில் பெருமளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக பிப்ரவரி 10 ஆம் நாள் அமைதி அறிக்கை என்னும் பெயரில் கோரிக்கை மனு ஒன்று வெளியிடப்பட்டது. இதில், அரசியல், அறிவியல் மற்றும் சமூக வட்டாரத்தைச் சேர்ந்த 69 பிரதிநிதிகள், கூட்டாகக் கையொப்பமிட்டுள்ளனர். ஜெர்மன் அரசு, உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தி, மோதல் தீவிரமடைவதைத் தடுத்து, உலகளவிலான போர் மற்றும் அணு போர் வெடிப்பிற்கான அபாயத்தைக் குறைக்க வேண்டும் என்றும், தூதாண்மை பேச்சுவார்த்தை மூலம் இச்சர்ச்சையை அமைதியாகத் தீர்க்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுவரை இந்தக் கோரிக்கை மனுவில் 6 இலட்சத்துக்கு மேலான கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.